மண்டல அளவிலான போக்குவரத்து ரத்து: மாவட்டத்திற்குள் 60 பஸ்கள் மட்டுமே இயக்கம்


மண்டல அளவிலான போக்குவரத்து ரத்து: மாவட்டத்திற்குள் 60 பஸ்கள் மட்டுமே இயக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2020 6:50 AM IST (Updated: 26 Jun 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

மண்டல அளவிலான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 60 பஸ்கள் மட்டும் மாவட்டத்திற்குள் இயக்கப்பட்டது. இதனால் நாமக்கல் பஸ்நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி ஏப்ரல், மே மாதங்கள் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அதற்குள் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்படி நாமக்கல்லில் இருந்து கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் மண்டல அளவில் நடைபெற்று வந்த பஸ் போக்குவரத்து நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. எனவே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

நாமக்கல் டெப்போவில் இருந்து 6 மொபல் பஸ்கள், 27 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் ஒருசில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் நாமக்கல் பஸ்நிலையம் வெறிச்சோடி இருந்தது.

60 பஸ்கள் இயக்கம்

இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்லில் 2 பணிமனைகள், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரத்தில் தலா ஒன்று என மொத்தம் 4 பணிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் 270 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 120 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

தற்போது மண்டல அளவிலான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், பொதுமக்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. எனவே மாவட்டத்தில் 60 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே அரசு உத்தரவின்பேரில் நாமக்கல் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு, இ-பாஸ் இருப்பவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையத்திலும் குறைந்த அளவிலேயே பஸ்கள் ஓடின. கடைகள், பேக்கரிகள், வணிக நிறுவனங்கள் நேற்று மாலை 5 மணியுடன் அடைக்கப்பட்டன. நகராட்சி ஆணையாளர் இளவரசன், துப்புரவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது திறந்து இருந்த கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர்.

Next Story