விழுப்புரம்- திண்டிவனம் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


விழுப்புரம்- திண்டிவனம் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Jun 2020 7:15 AM IST (Updated: 26 Jun 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- திண்டிவனம் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 36,690 வீடுகளிலும், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 16,754 வீடுகளிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 232 மருத்துவ பணியாளர்கள், 121 செவிலியர்கள் மூலம் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் சம்பந்தமான ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? என்று கண்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை மற்றும் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று மருத்துவ பணியாளர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பொதுமக்களின் உடல் வெப்பநிலையினையும், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை கண்டறியும் பணியையும் மேற்கொண்டு வந்ததை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவொரு வீடும் விடுதல் இன்றி அனைத்து வீடுகளுக்கும் சென்று பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தினார்.

திண்டிவனம்

இதனை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பஜார் தெரு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணியையும் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர்கள் விழுப்புரம் தட்சிணாமூர்த்தி, திண்டிவனம் ஸ்ரீபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story