தேனி, போடியில் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை பிரிவு


தேனி, போடியில் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை பிரிவு
x
தினத்தந்தி 26 Jun 2020 7:47 AM IST (Updated: 26 Jun 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

தேனி, போடியில் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை பிரிவு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கம்பம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் தேனி பழைய அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், வரும் காலங்களில் மருத்துவமனைகளில் இடவசதி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, கல்லூரி வளாகங்களை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக போடி அரசு பொறியியல் கல்லூரி, தேனி வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு இடங்களிலும் கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள விடுதியில் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து, போடி அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படுக்கை வசதிகள், ஐ.சி.யு. வார்டு அமைப்பது, சமையல் வசதி, குடிநீர் வசதி போன்றவை குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதற்காக மருத்துவ குழுவினர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

Next Story