மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் ஒரே வார்டில் 10 பேர் பலி


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் ஒரே வார்டில் 10 பேர் பலி
x
தினத்தந்தி 26 Jun 2020 3:24 AM GMT (Updated: 26 Jun 2020 3:24 AM GMT)

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 10 பேர் நேற்று ஒரே நாளில் பலி ஆனார்கள். இதற்கிடையே, உச்சிப்புளி கடற்படை விமானதளத்தில் 29 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

தமிழகத்தில் கொரோனா பரவல் புதிய வேகம் எடுத்து இருக்கிறது.

மதுரை மாவட்டம்

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 3,509 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்தது.

மேலும் நேற்று 45 பேர் உயிர் இழந்தனர். இதனால் தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 204 பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில்95 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 28 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில்13 பேருக்கும் நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரே வார்டில்10 பேர் பலி

மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் வகையில் நகரிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வருகிற 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேர் நேற்று அதிகாலை முதல் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். சிகிச்சை பலன் இன்றி ஒரே நாளில்10 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தனியார் நிறுவன ஊழியர்

நேற்று மரணம் அடைந்த 10 பேரில் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபரும் ஒருவர். இவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இவருக்கு மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு வேறு எந்த நோய் தொற்றும் இல்லாத நிலையில் கொரோனாவால் இறந்திருக்கிறார்.

இதேபோல் மதுரை தெற்கு மாரட் வீதியைச் சேர்ந்த 63 வயது நபர், அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்த 87 வயது முதியவர், விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் என 3 பேரும் உயிர் இழந்தனர்.

உடல்கள் ஒப்படைப்பு

கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த மற்ற 6 பேர் மரணம் அடைந்தது குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் கொரோனா வார்டில் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும், அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும், மேலும் அவர்களில் வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர்கள் இறந்து இருக்கலாம் என்றும் கூறினார்கள். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்கள் மரணம் குறித்து உறுதியாக கூற முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

மரணம் அடைந்த 10 பேரின் உடல்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடற்படை விமானதளம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமானதளத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லாத விமானங்கள் மூலம் இந்திய கடல் எல்லை கண்காணிக்கப்படுகிறது.

அங்கு பணியாற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். அங்கிருந்து சென்னை திரும்பிய அவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் பணியில் சேருவதற்காக சென்னையில் இருந்து உச்சிப்புளி சென்றனர்.

29 வீரர்களுக்கு கொரோனா உறுதி

அங்கு வீரர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு கடற்படை விமானதளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறையினர் உச்சிப்புளி கடற்படை விமானதளத்துக்கு சென்று நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினர். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story