திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன


திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
x
தினத்தந்தி 26 Jun 2020 11:00 AM IST (Updated: 26 Jun 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வாணாபுரம்,

தமிழக அரசு கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் பலர் செல்கின்றனர். அவர்கள் மூலமாக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனை தடுக்க தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முதல் மண்டல முறையில் இயங்கி வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு தற்போது மாவட்டத்துக்குள் மட்டும் குறிப்பிட்ட பஸ்கள் இயக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 முக்கிய சாலை எல்லைகள் உள்ளது. மேலும் கிராமப்புற எல்லைகள் 74 உள்ளது. இங்கு அனைத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனங்களில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் முக்கிய சாலை எல்லைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையான வாழவச்சனூர் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் வாணாபுரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதன் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெகுதூரம் அணிவகுத்து நின்றது. அவசர காரணத்துக்காக செல்பவர்களை மட்டும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். அதேபோன்று மாவட்ட எல்லைகளான பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அப்துல்லாபுரம் சோதனைச்சாவடி

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து தூசி அருகே உள்ள அப்துல்லாபுரம் சோதனைச்சாவடி வழியாக பல வாகனங்கள் மாவட்டத்துக்குள் எந்தவித இடையூறும் இல்லாமல் வருகிறது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று பல சோதனை சாவடிகளில் போலீசார் பணியில் இல்லை என்றும், பணியில் இருந்தாலும் பிற மாவட்ட வாகனங்கள் வந்து செல்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Next Story