முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் தொற்று கண்டறிவது எளிதாக உள்ளது- மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பேட்டி
சென்னையில் முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று கண்டறிவது எளிதாக உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை மையம் தயார்ப்படுத்தும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளில் 26 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். இவர்களை தனிகவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சமூக தலையீடு திட்டத்தின் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சென்னயில் 1,979 குடிசைப்பகுதிகளில் 92 தொண்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தென்சென்னையில் மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப்பகுதிகளான கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலமாக மிக குறைவான அளவிலே கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தில் 1,500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஒருவார காலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து செயல்பட தொடங்கி விடும். மாநகராட்சி சார்பில் மட்டும் தற்போது தினசரி 5 ஆயிரம் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்படுகிறது.
அந்தவகையில் சென்னையில் மட்டும் தினசரி 10 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 54 தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கைகள் உள்ளது. அதில் 4 ஆயிரத்து 500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த முழு ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் தொற்று பாதித்தவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுகிறார்கள்.
சென்னையில் 20 சதவீதம் கொரோனா நோயாளிகள் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் உள்ளிட்ட பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 30 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், வீட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story