வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் வந்த 22 பேருக்கு கொரோனா


வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் வந்த 22 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 12:30 AM GMT (Updated: 26 Jun 2020 8:52 PM GMT)

வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் வந்த மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஆலந்தூர், -

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த 16 ஆயிரத்து 342 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனைவரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 328 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 138 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் முகாமில் தங்கி இருந்தவர்களில் பக்ரைனில் இருந்து வந்த 12 பேர், கத்தாரில் இருந்து வந்த 4 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர், சவுதி அரேபியாவில் இருந்து வந்த 2 பேர், மாலத்தீவில் இருந்து வந்த ஒருவர் என மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்துவந்த 51 ஆயிரத்து 221 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது.

சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் போரூர் ரவுண்டானா பகுதியில் ஊரடங்கு நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் அதனை கண்காணிக்கும் பணியில் போரூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போரூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானது.

இந்தநிலையில் நேற்று போரூர் போலீஸ் உதவி கமிஷனரின் டிரைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே போலீஸ் நிலையத்தில் அடுத்தடுத்து 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story