சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைப்பு


சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 11:18 PM GMT (Updated: 26 Jun 2020 11:18 PM GMT)

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறப்பை கண்டித்து, கரூரில் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வியாபாரிகள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கரூர்,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்தில், போலீசாரை கண்டித்து வணிகர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். மேலும் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றி இறந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று கரூர் ஜவகர்பஜார், கோவைரோடு, வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், செங்குந்தபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பேக்கரி கடைகள், டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோன்று கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடியது

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜவகர்பஜார், கோவைரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. இருப்பினும் கரூர் பகுதியில் டீக்கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள மெடிக்கல்கள், இறந்த தந்தை-மகனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 11 மணி வரை அடைக்கப்பட்டு, பின்னர் திறக்கப்பட்டன.

கடையடைப்பை தொடர்ந்து மாலையில் வியாபாரிகள் தங்களின் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி, சாத்தான்குளத்தில் இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story