திண்டுக்கல் மாவட்டத்தில் நகைக்கடை ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில் நகைக்கடை ஊழியர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 Jun 2020 2:48 AM GMT (Updated: 27 Jun 2020 2:48 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் நகைக்கடை ஊழியர் உள்பட 2 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகினர்.

திண்டுக்கல்,

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், திண்டுக்கல் மாவட்டத்திலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 350-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்தநிலையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சாலை பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர், திண்டுக்கல்லில் உள்ள நகைக்கடை ஒன்றில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இதற்கிடையே அவருக்கு திடீரென்று காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்தநிலையில் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றவர்களில் இறந்த முதல் கொரோனா நோயாளி, இந்த முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நத்தம் வாலிபர்

இதேபோல் நத்தத்தை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அந்த வாலிபர் நேற்று இறந்தார்.

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

Next Story