தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்;பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமலாகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சென்னையில் ஏற்கனவே கடந்த 21-ந்தேதி தீவிர முழு ஊரடங்கு அமல் ஆனது. அப்போது பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இப்போது மீண்டும் ஒரு தீவிர முழு ஊரடங்கு நாளை (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. எனவே கடந்த முறை போலவே இந்த தடவையும் பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம். தேவையில்லாமல் சாலைகளில் நடமாட வேண்டாம். மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்களில் வேலை செய்வோர்,
பத்திரிகையாளர்கள் போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. அவர்கள் உரிய அடையாள அட்டையோடு பயணம் செய்யலாம். அதேவேளை அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சாலையில் சுற்றுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை தீவிர ஊரடங்கின்போது கடைபிடிக்கப்பட்ட கட்டுபாடுகளே இந்த தடவையும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story