வீட்டு குளியலறையில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது 35 குட்டிகளை ஈன்றதால் பரபரப்பு


வீட்டு குளியலறையில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது 35 குட்டிகளை ஈன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 1:44 AM GMT (Updated: 28 Jun 2020 1:44 AM GMT)

கோவை சாய்பாபா காலனியில் வீட்டு குளியலறையில் பதுங்கி இருந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சிக்கியது. அது பிடிபட்டதும் 35 குட்டிகளை ஈன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை சாய்பாபாகாலனி அருகே உள்ள கோவில்மேடு திலகர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் வீட்டின் வெளிப்புறத்தில் குளியலறை உள்ளது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் மனோகரன் குளியலறைக்கு சென்றார். அவர் அங்குள்ள விளக்கை போட்டபோது அங்கு ஒரு பாம்பு பதுங்கி இருந்தது.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் குளியலறை கதவை சாத்திவிட்டு வெளியே வந்தார். பின்னர் அதேப்பகுதியை சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளிக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த முரளி, குளியலறை கதவை திறந்து பார்த்தபோது அந்த பாம்பு அங்கேயே படுத்து இருந்தது. அவர் அருகில் சென்று பார்த்தபோது அது கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து முரளி, அந்த பாம்பை லாவகமாக பிடித்து, சாக்குப்பைக்குள் போட்டு வெளியே கொண்டு வந்தார். அந்த பாம்பை அருகில் வைத்த முரளி, அங்குள்ள கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது சாக்குப்பைக்குள் இருந்த பாம்பு அசைந்தது.

35 குட்டிகளை ஈன்றது

தான் சாக்குப்பையை சரியாக கட்டவில்லை என்று நினைத்த முரளி, அங்கு வந்து சாக்குப்பையை அவிழ்த்து பார்த்தார். அப்போது அந்த பாம்பு 3 குட்டிகளை ஈன்று இருந்தது. உடனே அவர் அந்த சாக்குப்பையை திறந்து வைத்தார். 2 மணி நேரத்துக்குள் மீண்டும் அந்த பாம்பு 32 குட்டிகளை ஈன்றது. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் அங்கு வந்து, பாம்பு மற்றும் அதன் குட்டிகளை ஆர்வத்துடன் பார்த்துவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பாம்பு மற்றும் அதன் குட்டிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, மதுக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது. 

Next Story