சேலம் அருகே மேட்டுப்பட்டியில் ரூ.19.17 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்


சேலம் அருகே மேட்டுப்பட்டியில் ரூ.19.17 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 28 Jun 2020 2:35 AM GMT (Updated: 28 Jun 2020 2:35 AM GMT)

சேலம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

சேலம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந் தேதி பிற்பகல் சென்னையில் இருந்து கார் மூலமாக சேலத்துக்கு வந்தார். பின்னர் அவர் மறுநாள் 25-ந் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் சேலம் திரும்பினார். இதைத்தொடர்ந்து 26-ந் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை, முக்கொம்பு புதிய கதவணை கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் திருச்சியில் இருந்து சேலம் வந்த அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்தார்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,345 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேலம் அம்மாபேட்டை நீருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பட்டி தரைமட்ட நீர் தேக்கத்தொட்டி வரை உள்ள 11.40 கிலோ மீட்டர் நீளமுள்ள பழைய சிமெண்டு கான்கிரீட் குழாய்களை மாற்றி புதிதாக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணி சேலம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இந்த குடிநீர் திட்டப்பணிகள் ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற இருக்கிறது. சேலம் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் புதிய குடிநீர் திட்டத்துக்காக இரும்பு குழாய்கள் அமைக்கும் பணிகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.45 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூமிபூஜை செய்து வைத்து அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அவர் தலைவாசலில் நடைபெற்று வரும் புதிய கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவாசலில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேட்டுப்பட்டியில் தொடங்கப்படும் குடிநீர் திட்டம் நிறைவேறுவதன் மூலம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் அளவை காட்டிலும் கூடுதலாக தலா 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் மக்கள் கூடுதலாக குடிநீர் வசதி பெற உள்ளனர்.

கூடுதலாக குடிநீர்

மேலும் இதுவரை ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு தற்போது வழங்கப்படும் குடிநீர் அளவைவிட கூடுதலாக 10 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 73 ஆயிரத்து 500 பேர் பயனடைய உள்ளனர். இந்த திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story