மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவிப்பு
மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-
பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துவிட்டது. இதை நாம் கண்டிப்பதுடன், தீவிரமான போராட்டம் நடத்த வேண்டும். கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.18 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலை ரூ.25 ஆக குறைத்து விற்க வேண்டும்.
கொரோனா வைரசை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. தேவையான நிதியை ஒதுக்காமல், மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டன. நாட்டின் நிதிநிலை கொரோனாவுக்கு முன்பே சரியாக இருக்கவில்லை. கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய-மாநில அரசுகளின் நிதி நிலை மிக மோசமாக உள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகளை செய்து கொடுக்கவில்லை. விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு உதவி திட்டத்தை கர்நாடக அரசு அறிவித்தது.
அந்த உதவித்தொகை விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை செலவு செய்யவில்லை.
வேளாண்மை சந்தைகளை நிர்வகிப்பது, மாநில அரசின் அதிகாரத்தில் உள்ளது. ஆனால் இதில் மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது. மத்திய அரசின் கைப்பாவையை போல் கர்நாடக அரசு செயல்படுகிறது. வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்தம், ஆரம்பத்தில் பார்ப்பதற்கு நன்மையை தருவது போல் தெரிந்தாலும், அடுத்து வரும் நாட்களில் விவசாயிகள் தெருவுக்கு தள்ளப்படும் நிலை உள்ளது.
நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஏழைகளுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்பது காங்கிரசின் கொள்கை. இதை தான் அம்பேத்கர் வலியுறுத்தினார். கர்நாடக அரசின் சட்ட திருத்தப்படி, யார் வேண்டுமானாலும் விவசாய நிலங்களை வாங்கலாம். விவசாய நிலங்களை பெரும் பணக்காரர்களுக்கு வழங்க இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story