நெல்லை- தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை- தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2020 10:44 AM IST (Updated: 28 Jun 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

களக்காடு,

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சாகுல்அமீது , ஹையாத் முகமது, ஆரிப் பாட்ஷா உள்பட பலர்கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. பாளையங்கோட்டை சித்தா கல்லூரி முன்பு மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர துணை தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் உசேன், இனை செயலாளர் ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்த குலாம் முகம்மது, சிறப்பு அழைப்பளராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற் சங்க அணி நெல்லை மாவட்ட தலைவர் களந்தை மீராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராதாபுரம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வள்ளியூரில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளியூர் கலையரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி பொருளாளர் சலீம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் துலுக்கர்பட்டி சிராஜ், வள்ளியூர் நகர தலைவர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு துலுக்கர்பட்டி தலைவர் தவுபிக் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஒயிஸ் முன்னிலை வகித்தார்.

சேரன்மாதேவி

அம்பை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலச்செவல், பத்தமடை, சேரன்மாதேவி, வீரவநல்லூர் மற்றும் வெள்ளாங்குளி ஆகிய பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலச்செவல் பகுதியில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் மோத்தி நைனா முகமது தலைமையிலும், பத்தமடையில் நகர தலைவர் அசன் காதர் தலைமையிலும், சேரன்மாதேவியில் தொகுதி தலைவர் அபுபக்கர் தலைமையிலும், வெள்ளாங்குழியில் தொகுதி செயலாளர் ஜெய்லானி தலைமையிலும், வீரவநல்லூரில் மாவட்ட பொதுச் செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கரன்கோவில்- புளியங்குடி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் அஜிர்உசேன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஷேக் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் பீர்மைதீன் நன்றி கூறினார்.

புளியங்குடி எம்.ஜி.ஆர். சிலை முன்பு மாவட்ட செயலாளர் இம்ரான் கான் தலைமையிலும், காமராஜர் சிலை முன்பு நகர தலைவர் அஹமது தலைமையிலும், மேல தைக்கா திடலில் நகர செயலாளர் அப்பாஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகர தலைவர் அபுஷாலிக், நகர செயலாளர் தமீம் அன்சாரி, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முஹம்மது உஸ்மானி, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மீரான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story