வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது வெடித்து சிதறின வாலிபர் பலி; 6 பேர் படுகாயம்


வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது வெடித்து சிதறின வாலிபர் பலி; 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Jun 2020 5:21 AM GMT (Updated: 28 Jun 2020 5:21 AM GMT)

வாலாஜா அருகே வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் தயாரித்தபோது அவை திடீரென வெடித்து சிதறியதில் வாலிபர் பலியானார். 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். வீடும் தரைமட்டமானது.

வாலாஜா,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த அணைக்கட்டு ரோட்டில் நரிக்குறவர் காலனி உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் நரிக்குறவர் தமிழன் என்பவர் வீட்டில் நேற்று சட்டவிரோதமாக காட்டுப்பன்றிகளுக்கும், இதர விலங்குகளை வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. மேலும் அங்கிருந்த தமிழன் (வயது 32), விஜய் (20), உழைப்பாளி (25), எஜமான் (22), சின்னதம்பி (27), வேதவள்ளி (25), நந்தினி (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் கவலைக்கிடமாக இருந்த உழைப்பாளி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்தவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், லேசான காயம் அடைந்தவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, வாலாஜா தாசில்தார் பாக்கியநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

வெடி விபத்து தொடர்பாக வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story