மராட்டியத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டியத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2020 12:15 AM GMT (Updated: 28 Jun 2020 10:17 PM GMT)

மராட்டியத்தில் மேலும் 5 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மும்பை நகரில் நோய் பரவலின் வேகம் குறைந்து இருக்கிறது. எனினும் தானே, கல்யாண்- டோம்பிவிலி, புனே என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்து 493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 626 பேரை கொரோனா தாக்கி உள்ளது. நேற்று 2 ஆயிரத்து 330 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 86 ஆயிரத்து 575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல மராட்டியத்தில் நேற்று மேலும் 156 பேர் உயிர்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 429 ஆகி உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 1,287 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்து 539 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மேலும் 87 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 4 ஆயிரத்து 371 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பையில் தற்போது 28 ஆயிரத்து 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 43 ஆயிரத்து 154 பேர் குணமடைந்து உள்ளனர்.

தானே மாநகராட்சி பகுதியில் 368 பேரும், கல்யாண் டோம்பிவிலியில் 420 பேரும், வசாய்-விராாில் 288 பேரும், புனே மாநகராட்சி பகுதியில் 867 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மராட்டியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் உள்ள 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதனால் மாநிலத்தில் 3 மாதத்துக்கு மேலாக இருக்கும் ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்படுமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தநிலையில், நேற்று மாநில மக்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் இன்னும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. மாநிலம் தொடர்ந்து இந்த வைரசின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. ஜூன் 30-ந் தேதிக்கு பிறகு (நாளை) ஊரடங்கு விலக்கப்படுமா? என்று கேட்டால் இல்லை என்பது தான் தெளிவான பதில்.

படிப்படியாக பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு வருவதற்கு மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் கீழ் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வால் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும். எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கப்பட்ட ‘சேஸ் தி வைரஸ்' (வைரசை துரத்துவோம்) திட்டத்தின் மூலம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பையில் நல்ல பலன் கிட்டியுள்ளது. இந்த திட்டத்தை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் அரசு மையங்களில் தனிமைபடுத்தப்படுவார்கள். கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் அணுகுமுறை மற்றும் சிகிச்சை முறைகள் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது.

மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களுக்கு பாடம் நடத்துவது எப்படி என்பதை பற்றி தான் முடிவு எடுக்க வேண்டியது உள்ளது. கொரோனா தொற்று பரவலை பொறுத்து தான் மாநிலத்தில் படிப்படியாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story