அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் படம்: 3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று வாலிபர் தற்கொலை


அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் படம்: 3 குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Jun 2020 5:00 AM IST (Updated: 29 Jun 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

பிரிந்து சென்ற மனைவியின் படம் அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்ததால் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பாபுல் பாடாவை சேர்ந்தவர் கைலாஷ் பர்மர்(வயது35). இவருக்கு 12 வயது மகன் நயன் மற்றும் மகள்கள் நந்தினி(8), நயனா(3) இருந்தனர். கடந்த 1½ மாதத்துக்கு முன் கைலாஷ் பர்மரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். பிள்ளைகள் 3 பேரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் தனது மனைவியின் புகைப்படம் வேறொரு நபரின் பேஸ்புக் கணக்கில் இருப்பதை பார்த்தார். இது கைலாஷ் பர்மருக்கு மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதன்பிறகு அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து இருக்கிறார். கைலாஷ் பர்மரின் தந்தை அந்த பகுதியில் தான் வசித்து வருகிறார். அவர் மாலை 4 மணியளவில் தேநீர் அருந்த தனது வீட்டுக்கு வரும்படி மகனை அழைத்தார். சிறிது நேரம் கழித்து வருவதாக தெரிவித்த கைலாஷ் பர்மர் அதன்பின்னர் அங்கு செல்லவில்லை.

இதையடுத்து இரவு 8 மணிக்கு சாப்பிடுவதற்கு அழைப்பதற்காக அவரது தந்தை அங்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரம் தட்டி பார்த்தும் கைலாஷ் பர்மரோ அல்லது அவரது குழந்தைகளோ கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

வீட்டுக்குள் கைலாஷ் பர்மர் மற்றும் அவரது மகன், மகள்கள் என 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவர்களது உடல்களை பார்த்து கைலாஷ் பர்மரின் தந்தை கதறி அழுதார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தந்தை மற்றும் பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, தனது பிள்ளைகள் 3 பேரையும் கழுத்தை அறுத்து கொன்று விட்டு கைலாஷ் பர்மரும் அதே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மனைவி பிரிந்து சென்றது மட்டும் அல்லாமல் அவரது புகைப்படம் அடுத்தவரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்ததால் விரக்தி அடைந்து அவர் இந்த பயங்கர முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story