மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல் + "||" + Near Surandai, reportedly died of being hit by Police : Relatives of Auto Driver Road Strike as 2nd day

சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்

சுரண்டை அருகே, போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார்: ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் 2-வது நாளாக சாலை மறியல்
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் உயிரிழந்த ஆட்டோ டிரைவரின் உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுரண்டை,

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 13-ந் தேதி உடல் நலக்குறைவால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவரது உடல் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை வார்டில் வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே வீரகேரளம்புதூரில் நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், வீரகேரளம்புதூர் போலீசார் தாக்கியதால் தான் குமரேசன் இறந்துள்ளார். எனவே அவரது சாவுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் குமரேசன் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் குமரேசனின் உடலை பெற்றுக்கொண்டு வீரகேரளம்புதூர் புறப்பட்டு சென்றனர். முன்னதாக நேற்று மாலை 3 மணிக்கு வீரகேரளம்புதூரில் குமரேசனின் உறவினர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையம் அருகே திரண்டு நின்றனர். பின்னர் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜாகிர் உசேன் (ஆலங்குளம்), கோகுல கிருஷ்ணன் (தென்காசி), சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் குமரேசன் உடல் வந்தது. அதைத்தொடர்ந்து உறவினர்கள் எழுந்து ஓடி வந்து ஆம்புலன்ஸ் அருகே நின்றனர். பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு வீராணத்தில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு மயானத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் போலீசார் குமரேசனை தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் பேரில், சந்தேக மரணத்தின் கீழ் வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், போலீஸ்காரர் குமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆலங்குளம் குற்றவியல் நடுவர் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சுரண்டை அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி
சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.