போலீசார் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை:கொத்தனார் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்


போலீசார் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை:கொத்தனார் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
x
தினத்தந்தி 29 Jun 2020 5:34 AM IST (Updated: 29 Jun 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதில் மனமுடைந்து தற்கொலை செய்த கொத்தனாரின் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கணேசமூர்த்தி (வயது 26). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எட்டயபுரம் போலீசார் அவரை வழிமறித்து விசாரித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேசமூர்த்தி கடந்த 26-ந்தேதி இரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கணேசமூர்த்தியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சின்னப்பன் எம்.எல்.ஏ., கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கணேசமூர்த்தியின் உடலை பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று எட்டயபுரத்தில் உள்ள கணேசமூர்த்தியின் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில், அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்கள் இந்திய கடற்படை கப்பல் மூலம் விரைவில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிந்து கொள்ளும் வகையில், ரூ.60 லட்சம் செலவில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் கூடுதலாக ஓரிரு நாளில் அமைக்கப்பட உள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில்தான் கடம்பூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். அதுதான் ‘லாக்-அப்’ மரணம். சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் உயிரிழந்து உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் மதுரை ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இதனை ‘லாக்-அப்’ மரணம் என்று அரசியலுக்காக கனிமொழி எம்.பி. கூறுகிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மதுரை ஐகோர்ட்டு வழங்கும் உத்தரவு, தீர்ப்பின் அடிப்படையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சின்னப்பன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story