திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மறியல்


திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மறியல்
x
தினத்தந்தி 29 Jun 2020 9:18 AM IST (Updated: 29 Jun 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கியதாக கூறி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தாடிக்கொம்பு,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:-

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அகரம் பிரிவில் ஓட்டல் நடத்தி வருபவர் ஜோசப் (வயது 35). நேற்று மதியம் இவர், தனது ஓட்டல் முன்பு அமர்ந்து நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஜோசப்பை அழைத்து விசாரணை நடத்தினார்.

பின்னர் அவரை, சப்-இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜோசப்பை, தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோசப் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், தனது உறவினர்களிடம் நடந்த விஷயத்தை தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஜோசப்பை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அகரம்-கருங்கல்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் ஜோசப் மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம், போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மீது ஜோசப் புகார் அளித்தார்.

அதனை பெற்று கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story