சூரம்பட்டி வலசு பகுதியில் ஆகாயத்தாமரையால் மறையும் அணைக்கட்டு


சூரம்பட்டி வலசு பகுதியில் ஆகாயத்தாமரையால் மறையும் அணைக்கட்டு
x
தினத்தந்தி 29 Jun 2020 9:29 AM IST (Updated: 29 Jun 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியில் ஆகாயத்தாமரையால் அணைக்கட்டு மறைந்து வருகிறது.

ஈரோடு,

ஈரோடு பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே சூரம்பட்டி வலசு பகுதியில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் வெட்டப்பட்டு உள்ளது. இந்த வாய்க்காலின் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. பின்னர் ஆக்கிரமிப்புகள் காரணமாக இந்த வாய்க்கால் பாசனம் தடை பெற்றது.

இதனால் வாய்க்கால் இருந்ததே மறைக்கப்பட்டது. எனவே சில ஆண்டுகளுக்கு முன்புவரை சாக்கடை சேரும் அணைக்கட்டாக இருந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகத்துடன் ஒளிரும் ஈரோடு, ஈரோடை அமைப்புகள் மற்றும் விவசாயிகள் இணைந்து சூரம்பட்டி அணைக்கட்டினை தூர்வாரும் பணியினை செய்தனர்.

ஆகாயத்தாமரை

அதுமட்டுமின்றி நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாசன வாய்க்கால் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியும் தொடங்கியது. இதற்காக அணைக்கட்டின் உயரம் சில அடிகள் உயர்த்தப்பட்டன.

வாய்க்காலில் தண்ணீர் பாசனம் தொடங்கியதால், ஈரோட்டில் சாஸ்திரி நகர், நாடார் மேடு உள்பட வாய்க்கால் பாயும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரத்தொடங்கியது. ஆனால், இந்த அணைக்கட்டுக்கு தீராத சாபமாக இருப்பது ஆகாயத்தாமரை என்கிற பாசி. இந்த பாசியை அழிக்க ஈரோடு மாநகராட்சி முதல் தனியார் அமைப்புகள் வரை பலமுறை முயற்சிகள் செய்தும் வெற்றி பெற முடியவில்லை.

புல்வெளி

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘நீர் நிலைகளில் ஆகாயத்தாமரை வளர்கிறது என்றால் அந்த தண்ணீர் மாசு அடைந்து இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். நல்ல நீரில் மாசு கலக்க தொடங்கி விட்டால் அதை வெளிப்படுத்தும் விதமாக இயற்கையின் அறிகுறிதான் ஆகாயத்தாமரை.

எனவே அணைக்கட்டு பகுதியில் ஆகாயத்தாமரை தடை செய்ய முடியாத அளவு வளர்கிறது என்றால் அதில் மாசு கலந்த தண்ணீர் வந்து சேர்கிறது என்பது உறுதி. எனவே அணைக்கட்டுக்கு சாக்கடை, கழிவுகள் வந்து கலப்பதை முதலில் தடுக்க வேண்டும். அதன் பிறகே ஆகாயத்தாமரை வளர்வதை தடுக்க முடியும் என்றார்.

தற்போது அணைக்கட்டில் ஆகாயத்தாமரை வளர்ந்து தண்ணீர் பெருகிக்கிடப்பதே தெரியாமல் பெரிய புல்வெளி போன்று காட்சி அளிக்கிறது.

Next Story