கொரோனா தடுப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உத்தரவு


கொரோனா தடுப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2020 3:00 AM IST (Updated: 29 Jun 2020 11:32 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் தடுப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் தேவைகள் குறித்த அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கொரோனா நோய் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அரசு தொழில்துறை முதன்மை செயலாளருமான முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றினால் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விவரம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு வந்தவர்கள், சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், அவர்களில் எவ்வளவு பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, தற்போது தனிமைப்படுத்தும் முகாமில் இருப்பவர்கள் விவரம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி முருகானந்தம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் போதுமான மருத்துவ பணியாளர்கள் உள்ளனரா? என்றும், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்றும் மருத்துவ உபகரணங்கள் தேவை ஏதும் உள்ளதா? என்றும் கேட்டார். அதற்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் தயார் நிலையில் இருப்பதாகவும், மருத்துவ பணியாளர்களும் போதுமான அளவில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கொரோனா நோய் தடுப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனுக்குடன் கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து நோய் பரவலை தடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி நோயால் பாதிப்பு ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

Next Story