கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள்‘இ-பாஸ்’ இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் பேட்டி


கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள்‘இ-பாஸ்’ இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2020 10:00 PM GMT (Updated: 29 Jun 2020 8:02 PM GMT)

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் ‘இ-பாஸ்’ இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் கூறினார்.

கிருஷ்ணகிரி,

தமிழக வணிக மற்றும் பத்திர பதிவு துறை செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அதிகாரியுமான பீலா ராஜேஷ் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தார். பர்கூர் கலைக்கல்லூரியில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் வளாகத்தை பார்வையிட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளை அதிகாரி பீலா ராஜேஷ் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் உடன் சென்றனர்.

தொடர்ந்து பர்கூர் பேரூராட்சி, பர்கூர் ஜெகதேவி சாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், அந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அவர்களுடைய வீட்டிற்கே நேரிடையாக தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதை கேட்டறிந்்தார். பின்னர் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா தொற்று கூடுதலாக ஏற்படும் பட்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ள வார்டுகளையும் அடிப்படை வசதிகள், மருத்துவப்பணியாளர்கள், அலுவலர்கள் தங்கி பணியாற்றும் குடியிருப்பு வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வளாகத்தை அவர் பார்வையிட்டார். இதையடுத்து ஓசூர் மனித மற்றும் விலங்கின நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டு மையத்தில் கொரோனா நோய் ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், சூளகிரி பத்திர பதிவு அலுவலகத்தையும் சிறப்பு அதிகாரி பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 452 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 59 பேர் குணமடைந்துள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 425 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை செய்யப்பட்டு அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 17 சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு இ-பாஸ் பெறாதவர்களை மாவட்டத்திற்குள் அனுமதிப்பதில்லை. ‘இ-பாஸ்’ இல்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வரும் 30 நாட்களில் கொரோனா தொற்று கூடும்பட்சத்தில் அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் 2 கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story