மதுரையில் ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா; சிகிச்சையில் இருந்த 4 பேர் பலி


மதுரையில் ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா; சிகிச்சையில் இருந்த 4 பேர் பலி
x
தினத்தந்தி 29 Jun 2020 9:07 PM GMT (Updated: 29 Jun 2020 9:07 PM GMT)

மதுரையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 303 பேர் பாதிக்கப்பட்டனர். இது போல் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை,

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் மதுரையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 284 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அதைவிட அதிகமாக 303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 92 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 31 பேர் பாதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சிறப்பு அனுமதி பெற்று வந்திருந்த 13 பேருக்கும் மதுரையை சேர்ந்த 12 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 80 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 303 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

இதுபோல் 154 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 303 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,302 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 609 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 1664 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மதுரையில் 26 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் மதுரையை சேர்ந்த 40 வயது ஆண் 2 பேர். 67 வயது பெண் ஒருவர், 67 வயது ஆண் ஒருவர் என 4 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் திடீரென இறந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்திருக்கிறது.

Next Story