சென்னையில் ஓட்டல்களில் 6-ந் தேதி முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி


சென்னையில் ஓட்டல்களில் 6-ந் தேதி முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி
x
தினத்தந்தி 30 Jun 2020 4:54 AM IST (Updated: 30 Jun 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஜூலை 6-ந் தேதி முதல் ஒட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.

சென்னை,

*சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில பணிகளுக்கு மட்டும் ஜூலை 6-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 50 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து தனியார் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. என்றாலும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

* வணிக வளாகங்கள் (மால்கள்) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன வசதி இயக்கப்படக் கூடாது.

* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, அங்குள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. குளிர் சாதன வசதி இயக்கப்படக் கூடாது.

* தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 சதவீத அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, பயன்படுத்தலாம். ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷா அனுமதிக்கப்படுகிறது.

* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story