சங்கரன்கோவிலில் சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்


சங்கரன்கோவிலில் சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2020 5:06 AM IST (Updated: 30 Jun 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில்- சேர்ந்தமரம் சாலையில் நெல்லை ஆவினுக்கு சொந்தமான பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்த பாலை பால் குளிரூட்டும் நிலையத்துக்கு கொண்டு வந்து தருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பொது முடக்கத்தின் போது பால் உற்பத்தியாளர்கள் இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து கொடுத்தனர். அதன்பிறகு கடந்த 21-ந் தேதி முதல் வேன் மூலம் பாலை கொண்டு வந்து தருகின்றனர். ஆனால் நேற்று பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்யவில்லை.

இதனால் பால் உற்பத்தியாளர்கள் சுமார் 200 லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பால்குளிரூட்டும் நிலையத்தினர் உற்பத்தியாளர்கள் கொண்டுவந்த பாலை கொள்முதல் செய்தனர். மேலும் பால் உற்பத்தியாளர்கள் குறித்து ஆய்வு செய்தபிறகு பால் கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story