சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைப்பது “நீதி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்” - கே.எஸ்.அழகிரி பேட்டி


சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைப்பது “நீதி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்” - கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 29 Jun 2020 11:54 PM GMT (Updated: 29 Jun 2020 11:54 PM GMT)

“வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைப்பது, நீதி கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்“ என்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் வழங்கிய பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், காங்கிரஸ் கட்சி சார்பில், ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினோம். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு போலீசார் நிகழ்த்திய கொடூரம் குறித்து குடும்பத்தினர் கூறிய விதம் அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்கிறது. ஏழைகளாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தனர். அதை காவல் துறையும், தமிழக அரசும் பறித்து விட்டது.

போலீசாரின் தாக்குதலில் கணவன், மகனின் லுங்கி முழுவதும் ரத்தக்கறை அப்படியே இருந்தது என்று ஜெயராஜின் மனைவி செல்வராணி கண்ணீர் மல்க கூறினார். காவல் துறையின் அத்துமீறல் சமூகத்தில் அனைவருக்குமே தெரிகிறது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்போம் என்று தமிழக அரசு கூறுவது, நீதி கிடைப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்தும். தவறு செய்த போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அது தாமதமானால், இளைஞர்களின் போராட்டம் அரசு வீழ்வதற்கு காரணமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் நடந்த இரட்டை கொலை போலீசாரால் நடத்தப்பட்டது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இறந்தவர்கள் எந்தவிதமான குற்ற பின்னணியும் இல்லாத வியாபாரிகள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே, அவர்களின் மரணத்துக்கு நீதி வேண்டும். கொலை செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு தமிழக காங்கிரஸ் துணை நிற்கும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்து இருக்கலாம். ஆனால், அதை விட்டு விட்டு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளை சிறைக்கு கொண்டு சென்றதில் சூழ்ச்சி உள்ளது. எல்லா வகையிலும் இதில் குற்றம் இருக்கிறது. அரசாங்கமும் போலீசும், காலம் தாழ்த்தினால், ஒரு மக்கள் இயக்கமாக மாறும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

முன்னதாக அவர், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, சாத்தான்குளம் சம்பவம் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் எம்.பி., தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன், அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி மண்டல மாநகர ஒருங்கிணைப்பாளர் பாரகன் அந்தோணிமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story