மாவட்ட செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் + "||" + Petrol-diesel price hike In Bangalore Demonstration on behalf of Congress

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கட்சியினருடன் சைக்கிளில் கப்பன் பார்க் அருகே உள்ள வருமானவரி அலுவலகத்தின் முன்பகுதிக்கு வந்தார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடன் ஆதரவாளர்களும் சைக்கிளில் வந்தனர்.


வருமான வரி அலுவலகம் முன்பு ஒன்றுகூடி அவர்கள் மத்திய அரசை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்குள்ள ரோட்டில் வாகன நெரிசல் உண்டானது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

“நாட்டின் சாமானிய மக்கள், விவசாயிகளை பாதுகாக்க நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். ஆட்சி அதிகாரம் வரும், போகும். காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தைவிட மக்களின் நலன் தான் முக்கியம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பெட்ரோல்-டீசல் விலைக்கு இடையே 30 சதவீதம் இடைவெளி இருந்தது. ஆனால் இன்று பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளில் எரிபொருள் மீதான வரியை உயர்த்தி மத்திய அரசு ரூ.18 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. தற்போது மக்கள் கொரோனாவால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால் மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. பணம் கொடுக்காவிட்டால் பிணத்தை கூட கொடுக்க தனியார் மருத்துவமனைகள் மறுக்கின்றன.

பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கண், காது, இதயமே இல்லையா?. எங்களின் இந்த குரல் டெல்லிக்கு கேட்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. மக்களின் நலனுக்காக குரல் எழுப்ப உங்களின் அனுமதி தேவை இல்லை.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. மக்கள் எங்கள் கட்சிக்கு கொடுத்துள்ள பலம் போதும். அதை வைத்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தாலுகா அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 102 டாலராக இருந்தது.

அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.61 ஆகவும், டீசல் ரூ.46 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 42 டாலராக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ரூ.84 ஆகவும்., டீசல் ரூ.80 ஆகவும் இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே நீங்கள் கூறிய நல்ல நாட்கள் இது தானா?. இவ்வாறு விலையை உயர்த்தி மக்களை உயிரோடு கொல்லுகிறீர்கள். உங்களின் இந்த மோசமான முடிவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து, ஆட்சியைவிட்டு அகற்றுவார்கள்.” இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் இரண்டு சக்கர வாகனத்தை பாடையில் வைத்து அதை தோள் மீது சுமந்தனர்.