கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,500 படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒப்புதல் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4,500 படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒப்புதல் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2020 9:45 PM GMT (Updated: 30 Jun 2020 7:39 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவ கல்லூரிகள் 4,500 படுக்கைகளை ஒதுக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனாவை தடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் முழுமையாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 2 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,200 படுக்கைகளை ஒதுக்குமாறு கேட்டோம். ஆனால் பெங்களூருவில் தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4,500 படுக்கைகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.

10 மருத்துவ கல்லூரிகளை தவிர்த்து மற்ற மருத்துவ கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,000 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரிகள் 4,500 படுக்கைகள் ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளன. ஆக மொத்தம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 6,500 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு கிடைக்கின்றன.

கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் கூறியுள்ளன. தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் காப்பீட்டு திட்ட பயன்கள் வழங்கப்படும்.

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்குவது குறித்து ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட மையத்தை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அமைக்கிறது. இந்த பணிகள் 2, 3 நாட்களில் நிறைவடையும். தனியார் மருத்துவமனைகளும் இந்த மையத்திற்குள் கொண்டு வரப்படும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்ற ஒரு குழு அமைக்கப்படுகிறது. தொலைதூர மருத்துவ சிகிச்சை வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Next Story