ஏரியில் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்ட வழக்கு: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆணவக்கொலை - தாய் உள்பட 4 பேர் கைது


ஏரியில் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்ட வழக்கு: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆணவக்கொலை - தாய் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2020 4:00 AM IST (Updated: 1 July 2020 1:17 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூர் அருகே, இளம்பெண் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆணவக்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

சிக்பள்ளாப்பூர்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா புலிகுண்டே கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. அந்த ஏரியில் கடந்த மாதம்(ஜூன்) 23-ந் தேதி ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். அவரது உடலில் பெரிய கல் கட்டப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த கவுரிபித்தனூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளம்பெண்ணை யாரோ கொலை செய்து அவரது உடலில் கல்லை கட்டி ஏரியில் வீசி சென்றது தெரிந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து கவுரிபித்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும் அந்த இளம்பெண் யார்? எப்பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

இருப்பினும் அந்த இளம்பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையான இளம்பெண் கவுரிபித்தனூர் தாலுகா துமகுண்டே கிராமத்தை சேர்ந்த சந்தியா(வயது 18) என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தியாவின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது தாய் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சந்தியாவின் தாய் ராமாஞ்ஜுனம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சந்தியாவை தனது இன்னொரு மகள் நேத்ராவதி, அவரது கணவர் பாலகிருஷ்ணா, தனது மகன் அசோக் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து உடலை ஏரியில் வீசியதை ராமாஞ்ஜுனம்மா ஒப்புகொண்டார்.

இதையடுத்து ராமாஞ்ஜுனம்மாவை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் நேத்ராவதி, பாலகிருஷ்ணா, அசோக் ஆகியோரையும் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கொலையான சந்தியாவுக்கு 15 வயது இருக்கும் போது, ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து உள்ளார். அந்த வாலிபர் வேறு சாதியை சேர்ந்தவர் ஆவார்.

இதுபற்றி அறிந்த சந்தியாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆனாலும் சந்தியா வீட்டைவிட்டு வெளியேறி இந்துப்பூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மைனர் பெண்ணான தனது மகளை கடத்தி சென்றதாக அந்த வாலிபர் மீது சந்தியாவின் பெற்றோர் இந்துப்பூர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் சந்தியாவை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து உள்ளனர். ஆனால் சந்தியா, தனது காதலனை தான் திருமணம் செய்வேன் என்று கூறி அடம்பிடித்து உள்ளார். ஆனால் வேறு சாதி வாலிபரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். ஆனாலும் சந்தியா தனது காதலில் உறுதியாக இருந்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமாஞ்ஜுனம்மா பெற்ற மகள் என்றும் கூட பாராமல் சந்தியாவை ஆணவக்கொலை செய்ய முடிவு செய்து உள்ளார். இதுபற்றி அவர் தனது மகள், அவரது கணவர், மகனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டு உள்ளனர். இதையடுத்து சந்தியாவை புலிகுண்டே கிராமத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவரது கழுத்தை 4 பேரும் சேர்ந்து நெரித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது உடலில் பெரிய கல்லை கட்டி ஏரியில் வீசி சென்றது அம்பலமாகியுள்ளது.

கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் சந்தியாவின் தந்தைக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வேறு சாதி வாலிபரை காதலித்து வந்ததால் பெற்ற மகள் என்றும் கூட பாராமல் இளம்பெண்ணை தாய் ஆணவக்கொலை செய்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story