ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்


ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 1 July 2020 4:15 AM IST (Updated: 1 July 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக சாத்தான்குளம் போலீஸ் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு ஆவணங்களை பாதுகாக்க தாசில்தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாவு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. கோவில்பட்டி முதலாவது மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்பேரில் அவர் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார். மறுநாள் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார். அப்போது போலீசார் சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு, ஐகோர்ட்டுக்கு புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆவணங்களை கைப்பற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஒரு தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோரை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பணி நியமனம் செய்து போலீஸ் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆவணங்கள், தடயங்களை அழிக்காமல் பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும்போது, ‘சாத்தான்குளம் போலீஸ் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தூர்ராஜன், துணை தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அங்குள்ள ஆவணங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்கள்’ என்றார்.

Next Story