மத்திய அரசு எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டாமல் கொரோனா, சீனா பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்


மத்திய அரசு எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டாமல் கொரோனா, சீனா பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் சிவசேனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jun 2020 11:00 PM GMT (Updated: 30 Jun 2020 11:00 PM GMT)

மத்திய அரசு எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டாமல் கொரோனா, சீனா உடனான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

சிவசேனா கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு சீனா, கொரோனா பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது அல்ல. எதிர்க்கட்சிகளால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சலசலக்க தேவையில்லை. கொரோனா வைரஸ் காலர் டீயூனை கேட்டு சலிப்பு அடைந்தது போல, நாங்கள் பா.ஜனதா - காங்கிரஸ் சண்டையால் சோர்ந்துவிட்டோம். கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி ஊடுருவியதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் ஆளும் கட்சி சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் குறிவைத்து வருகிறது.

சீனா, ராஜூவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி வழங்கியதாக பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. பல சீன நிறுவனங்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி செய்ததாக காங்கிரஸ் அதற்கு பதிலடி கொடுக்கிறது. சீனா பதுங்கு குழிகளையும், கூடாரங்களையும் எல்லையில் அமைக்க, பா.ஜனதா - காங்கிரஸ் போர் தினமும் நடந்து வருகிறது. பழையதை விட்டுவிடுங்கள். சீன விவகாரத்தில் புதிய உத்தி தேவைப்படுகிறது.

நமது நாட்டுக்காக புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். நேருவானாலும், மோடியானாலும் சீனா பிடிவாதமாக தான் இருக்கும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story