மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 முதியவர்கள் பலி ஒரேநாளில் 65 பேருக்கு தொற்று + "||" + In the Dindigul district Corona kills 2 elderly people 65 people infected in a single day

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 முதியவர்கள் பலி ஒரேநாளில் 65 பேருக்கு தொற்று

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 முதியவர்கள் பலி ஒரேநாளில் 65 பேருக்கு தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 முதியவர்கள் இறந்துபோனார்கள். இது தவிர நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
திண்டுக்கல்,

தமிழகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், திண்டுக்கல் மாவட்டத்திலும் வேகமாக பரவி வருகிறது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் மேலும் 2 முதியவர்கள் கொரோனாவுக்கு இறந்து போனார்கள்.


திண்டுக்கல்லை சேர்ந்த 75 வயது முதியவருக்கு நேற்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேநேரம் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல் நத்தத்தை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி சப்-கலெக்டர் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறையின் டாக்டர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறைக்கு சுழற்சி முறையில் பணிக்கு வந்த ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் மற்றொரு பெண் ஊழியர் மற்றும் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆகியோருக்கு நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதித்த பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்பட மேலும் 63 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதில், திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 28 பேர், நத்தம் தாலுகாவில் 19 பேர், ஆத்தூர் தாலுகாவில் 3 பேர், வேடசந்தூர் தாலுகாவில் 5 பேர், பழனி தாலுகாவில் 4 பேர், கொடைக்கானல் தாலுகாவில் 3 பேர், நிலக்கோட்டை தாலுகாவில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், உச்சக்கட்டமாக நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.