அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை: கொரோனா பரவலை தடுக்க துரித நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு


அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை: கொரோனா பரவலை தடுக்க துரித நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு
x
தினத்தந்தி 1 July 2020 1:47 AM GMT (Updated: 1 July 2020 1:47 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நோய் தடுப்பு பணியை துரிதப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவு வழங்குவதை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான நாளிதழ்கள், புத்தகங்கள் வழங்கி அரவணைப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகப்படியாக தண்ணீர் தேவைப்படுவதால் உடனடியாக மருத்துவமனை வளாகத்திற்குள் நீர் பாதையை கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியும் பணிகள், நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதி எண்ணிக்கை, சுவாசக்கருவிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் மருத்துவர்களின் தேவை ஆகியவை குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்ததோடு மருத்துவர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி கடைவீதி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நகராட்சி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டறிந்ததோடு ஒட்டுமொத்தமாக கொரோனா நோய் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் நோய் தடுப்பு பணியை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், நலப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story