ஈரோட்டில் வேகமெடுக்கும் தொற்று: மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு 176 ஆக உயர்வு


ஈரோட்டில் வேகமெடுக்கும் தொற்று: மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு 176 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 July 2020 4:00 AM IST (Updated: 1 July 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது.

கொரோனா பரவல்

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு உள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொற்று அதிகமாக ஏற்பட்ட இடங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கிருமி நாசினி தெளித்தல் போன்ற சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும், கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று இரட்டை இலக்கத்தில் உள்ளது.

நேற்று மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது. இதில் ஈரோடு மாநகராட்சியில் பி.பி.அக்ரஹாரத்தில் 62 வயது ஆண், 58 வயது பெண், 30 வயது பெண் ஆகியோரும், ரங்கம்பாளையத்தில் 32 வயது ஆணும், திண்டலில் 14 வயது, 7 வயதுடைய 2 சிறுமிகளும், கருங்கல்பாளையத்தில் 26 வயது ஆணும், எல்லப்பாளையத்தில் 29 வயது, 25 வயது உடைய ஆண்களும், மாணிக்கம்பாளையத்தில் 28 வயது பெண், 30 வயது ஆண் ஆகியோரும், சூரியம்பாளையத்தில் 54 வயது ஆணும், பெரியார்நகரில் 18 வயது இளம்பெண்ணும் என 13 பேர் பாதிக்கப்பட்டனர்.

95 பேர் சிகிச்சை

இதேபோல் பெருந்துறையில் 45 வயது பெண்ணும், அவல்பூந்துறையில் 42 வயது, 58 வயது உடைய ஆண்களும், கவுந்தப்பாடியில் 15 வயது சிறுவனும், பவானி லட்சுமி நகரில் 31 வயது ஆணும், மன்னாதம்பாளையத்தில் 49 வயது ஆணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 95 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். வீட்டு தனிமைப்படுத்துதலில் 3 ஆயிரத்து 645 பேர் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் நேற்று புதிதாக 117 பேர் சேர்க்கப்பட்டனர்.

கணவன்-மனைவி

இதற்கிடையே ஈரோடு முனிசிபல் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கணவன்-மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் 15 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்த 50 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களுடைய விவரம் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெறாததால், இன்று (வியாழக்கிழமை) வெளியாகும் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவல் வேகமெடுத்து இருப்பதால், பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story