கொரோனாவால் ஈரானில் தவிப்பு 4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்


கொரோனாவால் ஈரானில் தவிப்பு 4 மாதங்களுக்கு பிறகு 535 மீனவர்கள் குமரி வந்தனர்
x
தினத்தந்தி 2 July 2020 5:00 AM IST (Updated: 2 July 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஈரானில் தவித்த குமரி மீனவர்கள் 535 பேர் 4 மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் வந்தனர். அவர்கள் 6 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆரல்வாய்மொழி,

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.

மீட்க நடவடிக்கை

‘வந்தே பாரத் இயக்கம்’ மூலம் விமானம் மற்றும் கடற்படை கப்பல் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். கடற்படையினர் ‘சமுத்திர சேது’ என்ற பெயரில் கடற்படை கப்பல்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி அவர்களை மீட்கும் பணியும் நடக்கிறது.

அதன்படி ஏற்கனவே இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் தவித்தவர்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் ஈரான் நாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் மற்ற மாவட்ட மீனவர்கள், வெளி மாநில மீனவர்களும் மீன்பிடி தொழில் இல்லாததால் எப்படியாவது சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற தவிப்பில் இருந்தனர்.

குமரி மீனவர்கள்

அதே சமயத்தில், தங்களுடைய வேதனையை மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர். இதற்கிடையே, ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களின் குடும்பத்தினரும் சமூக வலைதளம் மூலமாக உருக்கமான பதிவை தொடர்ந்து தெரிவித்தபடி இருந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், வசந்தகுமார் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் வலியுறுத்தினார். பிறகு வெளியுறவுத்துறை சார்பிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடிக்கு கப்பலில் வந்தனர்

அதன்படி இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். ஜலஸ்வா மூலம் ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரானுக்கு கப்பல் அனுப்பப்பட்டு, அங்கு தவித்த மீனவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டனர். ஈரானில் இருந்து 687 மீனவர்களுடன் கப்பல் புறப்பட்டது. இதில் 535 பேர் குமரி மீனவர்கள் ஆவர்.

வயிற்று பிழைப்புக்காக சென்ற இடத்தில் கொரோனாவால் பரிதவித்த மீனவர்கள், சில மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் பயணத்தை தொடர்ந்தனர். இந்த கப்பல் நேற்று தூத்துக்குடிக்கு வந்தது. வடக்கு கரித்தளத்தில் காலை 7 மணி அளவில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கப்பலில் இருந்து மீனவர்கள் இறங்கினர்.

அமைச்சர் வரவேற்றார்

அவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து மீனவர்கள் கப்பலில் இருந்து இறங்கியதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கு திரவம் வழங்கப்பட்டது.

அவர்களின் உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரிசோதனையாக தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் மீனவர்களின் உடல் வெப்பநிலை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள், அங்கிருந்து பஸ்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டு உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அனைவருக்கும் உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு, சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குமரிக்கு வருகை

அதேபோல் குமரி மீனவர்கள் 535 பேரும் அங்கிருந்து சிறப்பு பஸ்கள் மூலம் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களை தனிமைப்படுத்துவதற்காக குமரியில் ஏற்கனவே 6 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆதன்கோடில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி, தொலையாவட்டத்தில் உள்ள கல்லூரி, தூத்தூரில் உள்ள கல்லூரி. வெள்ளமோடியில் உள்ள கல்லூரி, கடியப்பட்டினத்தில் உள்ள கல்லூரி, தோவாளை பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி முகாமாக மாற்றப்பட்டு மீனவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன.

அதன்படி தோவாளை பகுதியில் உள்ள முகாமில் 185 மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாக கோட்டாட்சியர் மயில் தலைமையில் தோவாளை தாசில்தார் ராஜேஸ்வரி, துணை தாசில்தார் திவான், வருவாய் ஆய்வாளர் பழனிவேல் ராஜன், கிராம நிர்வாக அதிகாரி சிவஞானம் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொரோனா பரிசோதனை

முன்னதாக மருத்துவக்குழு சார்பில் 209 மீனவர்களிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இவர்களுக்கான பரிசோதனை முடிவு 24 மணி நேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருந்தால், அந்த மீனவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மற்றவர்கள் தொடர்ந்து அந்த முகாமிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு தொற்று இல்லை என தெரிய வந்த பிறகு தான் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தனிமை முகாமில் இருக்கும் சமயத்தில் மீனவர்களுக்கு தேவையான சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல் மற்ற 5 முகாம்களிலும் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர். தூத்தூரில் 39 பேர், அதன்கோடில் 67 பேர், தொலையாவட்டத்தில் 47 பேர், வெள்ளமோடியில் 117 பேர், கடியப்பட்டினத்தில் 56 பேர் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவால் ஈரானில் தவித்த குமரி மீனவர்கள் 535 பேர் 4 மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்ததால் அவர்களுடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவர்களை பத்திரமாக மீட்க முயற்சி எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கும் மீனவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Next Story