தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்யப்பட வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்யப்பட வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 2 July 2020 4:00 AM IST (Updated: 2 July 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி மாநகராட்சி பணியாளர்களால் செய்யப்பட வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி மாநகராட்சி பணியாளர்களால் செய்யப்பட வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

ஆலோசனை மையம்

நெல்லை மாநகராட்சி அலுவலக இரண்டாம் தளத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார். இதை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் பெற்றுக்கொண்டார்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

தற்போது நெல்லை மாநகரின் சில பகுதிகளில் ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் கட்டிடங்களை ஒட்டிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்கட்டிடத்திலுள்ள இதர நபர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று இல்லாத நிலையில், அவர்களை அக்கட்டிடத்திலேயே தனிமைப்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் எவருக்கேனும் ஆஸ்துமா, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள் போன்றவை இருந்தால், அவர்களை பற்றிய பெயர், முகவரி, விவரங்கள் அன்றாடம் சேகரிக்கப்பட்டு ஆலோசனை மையத்திற்கு வந்து சேரும்.

இந்த மையத்தில் பெறப்பட்ட விவரங்களின்படி பிரச்சினை உள்ளவர்களை தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், அன்றாடம் எடுக்க வேண்டிய உணவுகள் மற்றும் கொரோனா வைரசில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆலோசனை வழங்க வேண்டும்.

வழிமுறைகள்

மேலும் துணை இயக்குனர் சுகாதார பிரிவு மற்றும் மைய அலுவலக சுகாதார பிரிவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்படும் கள ஆய்வு அறிக்கையின் படி குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அவர்களின் கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை வழிமுறைகள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அணுக வேண்டிய அருகாமையில் உள்ள மருத்துவமனை விவரங்கள் முதலியவை சம்பந்தப்பட்டவர்களுக்கு கனிவான முறையில் உறிய ஆலோசனைகள் வழங்கிடவும், இவ்வாறு தினசரி ஆலோசனை வழங்கப்பட்ட விவரம் குறித்து யார், யாரை தொடர்பு கொள்ளப்பட்டது என்பதை பதிவேடு ஒன்றின் மூலம் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் பாஸ்கர், நாராயணன், மக்கள் தொடர்பு துணை இயக்குநர்அண்ணா, மாநகர் நல அலுவலர் சரோஜா, டாக்டர் அன்புராஜன், பயிற்சி உதவி கலெக்டர் அனிதா, உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், பிரேம் ஆனந்த், சொர்ணலதா, வெங்கட்ராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story