தென்காசியில் குடிநீர் தொட்டி அருகில் கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
தென்காசியில் குடிநீர் தொட்டி அருகில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி,
தென்காசியில் குடிநீர் தொட்டி அருகில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
கொரோனா
உயிர்கொல்லி நோயான கொரோனா தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தென்காசி நகரிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுடன் காவல்துறையும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தென்காசி மலையான் தெரு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் வெளிப்பகுதியில் பொது குடிநீர் குழாய் உள்ளது. இங்கு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகிறார்கள். குடிநீர் தொட்டியின் முன்புறத்தில் தாய்சேய் நல விடுதி உள்ளது. இங்கு பணியாற்றிய ஒரு பெண் டாக்டருக்கு நோய் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த விடுதி அடைக்கப்பட்டது. இந்த விடுதியில் இதற்கு முன்பு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு வந்தது.
இந்த விடுதி அடைக்கப்பட்டதால் இதன் பின்புறம் உள்ள குடிநீர் தொட்டி அருகில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை அதிகாரிகளிடம் வேறு பகுதிக்கு மாற்ற வற்புறுத்தி வந்தனர். ஆனால் தொடர்ந்து இங்கேயே இந்த பணி நடைபெற்றது.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அதிகாரிகளிடம் இங்கு பரிசோதனை செய்யக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுக்க கூறினார்கள். அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள் பொது குடிநீர் குழாயை பயன்படுத்துகிறார்கள். அங்கு பரிசோதனை செய்வது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே அந்த பகுதியில் பரிசோதனை செய்யக்கூடாது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
Related Tags :
Next Story