வையம்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண் போலீசின் வாக்குமூல வீடியோ வெளியானதால் பரபரப்பு


வையம்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண் போலீசின் வாக்குமூல வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 July 2020 3:30 AM IST (Updated: 2 July 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண் போலீ சின் வாக்கு மூலம் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வையம்பட்டி, 

வையம்பட்டி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண் போலீ சின் வாக்கு மூலம் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் போலீஸ் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பவானி (வயது 34). வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை பெண் போலீசாக பணியாற்றி வந்த இவர், கடந்த 28-ந்தேதி பணியில் இருக்கும் போதே எலிபசை (விஷம்) சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட பவானி அவர் எலிபசையை குளிர்பானத்தில் கலந்து குடிப்பது, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஆகியவற்றை வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்து விட்டு இறந்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ காட்சி

அந்த வீடியோ காட்சியில் தன்னுடைய மொபட்டில் பவானி சீட்டின் கீழ் புறத்தில் பொருட்கள் வைக்கும் பகுதியில் 2 அரை லிட்டர் குளிர்பான பாட்டில்களை வைத்திருக்கிறார். அதில் ஒரு குளிர்பான பாட்டிலை எடுத்து அதில் 3 எலிபசை பாக்கெட்களை ஊற்றி கலக்குகிறார். பின்னர் அதை வீடியோவில் பதிவு செய்தபடியே குடிக்கிறார். ஹெல்மெட் அணிந்த நிலையில் தற்கொலைக்கு முயலும் அவர் அதற்கான காரணத்தையும் கூறி உள்ளார்.

அதில் தான் இரு பெண் போலீசாரிடம் தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் கொடுத்த நிலையில் அவர்கள் இருவரிடமும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பணத்தை கேட்டும் கூட கொடுக்க மறுப்பதோடு யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று கூறுகின்றனர். இந்த வேதனை ஒருபுறம் என்றால் கடந்த 2 நாட்களாக காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா வந்துடுச்சோனு பயமா இருக்கு. என்ன பண்றதுனே தெரியல. எல்லாம் ஏமாத்துறாங்க, எல்லாருமே ஏமாத்துறாங்க என்று அந்த வீடியோ வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு முன் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story