கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 2 July 2020 6:00 AM IST (Updated: 2 July 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பெங்களூருவில்முதல்-மந்திரி எடியூரப்பா அவசர ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் 10, 20, 30 என்ற அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருந்தது.

மருத்துவ நிபுணர்கள்

ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500, 700 உயர்ந்து தற்போது 1,000 என்ற இலக்கை நெருங்கி உள்ளது. அதுபோல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடக அரசும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பெங்களூருவில் கடைகள் திறப்பு நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும், அதை தடுப்பது தொடர்பாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூருவில் நேற்று மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ துறை நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு

இந்த கூட்டம் முடிந்த பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிறப்பிக்க வேண்டிய வழிகாட்டுதல், அமல்படுத்த வேண்டிய செயல் திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மருத்துவத்துறை நிபுணர்கள், அறிகுறி இல்லாத மற்றும் லேசான பாதிப்புடன் உள்ள கொரோனா நோாயாளிகளை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு வழிகாட்டுவது நல்லது என்று பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் மீதான சுமை குறையும் என்றும் தெரிவித்தனர்.

பிராண வாயு வினியோகம்

இணை நோய் உள்ள, பாதிப்பு அதிகமாக இருக்கும் கொரோனா பாதித்தவர்களுக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்குமாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர். பாதிப்பு இரட்டிப்பு ஆவதை தடுக்க வேண்டும், மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர்.

கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பிற துறைகளில் பணியாற்றுகிறவர்களை இதற்கு பயன்படுத்தி கொள்ளுமாறு ஆலோசனை தெரிவித்து உள்ளனர். ஆஸ்பத்திரிகளுக்கு பிராண வாயு வினியோகம் மற்றும் மருந்துகளை வழங்குவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறினர்.

வழிகாட்டுதல்கள்

கர்நாடகத்தில் மக்களிடையே கொரோனா பயம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகள் குறித்து ஆலோசித்து புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படும்”.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் “கொரோனா பாதிப்பு மற்றும் பலி அதிகரிப்புக்கு காரணம் என்ன? குறிப்பாக பெங்களூருவில் பாதிப்பு அதிகரிப்பது ஏன்? அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பதில் கர்நாடகத்துக்கு ஏற்புடைய சிறந்த நடைமுறைகளை எதிர்நோக்கி இருக்கிறோம். மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து கொரோனா ஒழிப்பு பணியில் ஒத்துழைக்க வேண்டும்.” என்றார்.

Next Story