மும்பையில் சமையல் கியாஸ் விலை ரூ.3.50 உயர்வு விமான எரிபொருள் விலையும் அதிகரிப்பு
மும்பையில் சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.3.50 அதிகரித்தது. விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது.
மும்பை,
மும்பையில் சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.3.50 அதிகரித்தது. விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்
வீடுகளுக்கு 14.2 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையிலும், அதற்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலையிலும் வினியோகிக்கப்படுகிறது.
இதன் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன.
விலை உயர்வு
இந்நிலையில், நேற்று வீட்டு உபயோக சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டது. மும்பையில் ரூ.590.50 ஆக இருந்த கியாஸ் விலை, ரூ.594 ஆக உயர்ந்தது. சிலிண்டருக்கு ரூ.3.50 அதிகரித்தது.
அதுபோல், டெல்லியில் 1 ரூபாய் அதிகரித்து ரூ.594 ஆனது. கொல்கத்தாவில் ரூ.4.50 உயர்ந்து ரூ.620.50 ஆனது. சென்னையில் ரூ.4 உயர்ந்து ரூ.610.50 ஆனது.
வர்த்தக சிலிண்டர்
அதுபோல், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வினியோகிக்கப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டு சமையல் கியாஸ் விலை சென்னையில் 1 ரூபாய் அதிகரித்து, ரூ.1,255 ஆனது.
மும்பையில் 3 ரூபாயும், கொல்கத்தாவில் 4 ரூபாயும் உயர்ந்தது. ஆனால், டெல்லியில் மட்டும் ரூ.4 குறைந்தது.
விமான எரிபொருள்
இதற்கிடையே, டெல்லியில், விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2 ஆயிரத்து 923 அதிகரித்து, ரூ.41 ஆயிரத்து 993 ஆனது. அதாவது, 7.48 சதவீதம் விலை உயர்ந்தது. ஒரே மாதத்தில் இது 3-வது விலை உயர்வாகும்.
அதே சமயத்தில், நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.
Related Tags :
Next Story