புதிதாக 1,511 பேருக்கு கொரோனா பாதிப்பு மும்பையில் 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்


புதிதாக 1,511 பேருக்கு கொரோனா பாதிப்பு மும்பையில் 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்
x
தினத்தந்தி 2 July 2020 5:00 AM IST (Updated: 2 July 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புதிதாக 1,511 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மராட்டிய தலைநகர் மும்பையில் ‘வைரசை துரத்துவோம்' திட்டத்தின் கீழ் ஓரளவு தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் 1,511 பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில் மும்பையில் நேற்று புதிதாக 1,511 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் ேநாய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 708 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு பிறகு மும்பையில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல நகரில் மேலும் 75 பேர் வைரஸ் நோய்க்கு பலியானார்கள். இதுவரை மும்பையில் 4 ஆயிரத்து 629 பேர் உயிரிழந்து உள்ளனர். 44 ஆயிரத்து 791 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

144 தடை உத்தரவு

இந்தநிலையில் மும்பை நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கும் வந்தது. வருகிற 15-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே 144 தடை அமலில் இருந்த நிலையில், இடையில் அது விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது கெடுபிடியை அதிகரிக்கும் வகையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவின் படி தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. பொது இடங்கள், தனியார் இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூடக்கூடாது. அதாவது 2 பேர் கூட சேர்ந்து செல்ல அனுமதி இல்லை.

இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மருத்துவம் போன்ற அவசர தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக யாரும் வெளியே வரக்கூடாது.

வீட்டு அருகே உள்ள கடைகளுக்கு...

உணவு, காய்கறிகள், பால், மளிகை கடைகள், மருந்துகடைகள் வழக்கம் போல் செயல்படலாம். அவசர சேவைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

கடைகள், மார்க்கெட், சலூன் கடை, பியூட்டி பார்லர், உடற்பயிற்சி போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டு அருகே உள்ள பகுதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதுபோன்ற தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல அனுமதி கிடையாது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள் கூட எந்த சூழ்நிலையிலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூடக்கூடாது.

6 அடி சமூக இடைவெளி

அனைத்து நேரங்களிலும் 6 அடி வரையிலான சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவசர மற்றும் சிறப்பு காரணங்களுக்காக அனுமதி கொடுக்கும் அதிகாரம் துணை போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவலை மும்பை நகர உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story