ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் முகக்கவசத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரம் கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கண்டுபிடித்தார்
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக்கவத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கண்டுபிடித்து உள்ளார்.
கோவை,
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகக்கவத்தை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கண்டுபிடித்து உள்ளார்.
நவீன எந்திரம் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான கேடயமாக முகக்கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் முக்கியமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் இந்த வைரஸ் விட்டு வைப்பதில்லை. இந்த நிலையில் முகக்கவசம் கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்களை புற ஊதாக்கதிர்கள் மூலம் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் நவீன எந்திரத்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சமூக மருத்துவத்துறையில் பணியாற்றும் டாக்டர் பன்னீர்செல்வம் கண்டுபிடித்துள்ளார்.
பரிசோதனை முறையில் கோவை அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் டீன் காளிதாசிடம் (பொறுப்பு)வழங்கினார். இதுகுறித்து டாக்டர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-
புற ஊதாக்கதிர்கள்
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் என்-95 என்ற முகக்கவசத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் விலை அதிகமாகும். டாக்டர்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு இந்த முகக்கவசத்தை தூக்கி எறிவார்கள். எனவே இந்த முகக்கவசத்தில் உள்ள கிருமிகளை புற ஊதாக்கதிர்களை பயன்படுத்தி அழித்து மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் புற ஊதாக்கதிர் கிருமிநாசினி எந்திரம் என்ற பெட்டியை உருவாக்கி உள்ளேன். இந்த பெட்டி முழுவதும் அலுமினியம் பாயில் சீட் ஒட்டப்பட்ட புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் அல்ட்ரா வைலட் சி என்ற லைட்டுகளை பயன்படுத்தி, அதில் வெளியாகும் புற ஊதாக்கதிர்கள் பயன்படுத்தி கிருமிகளை நீக்கும் எளிமையான எந்திரத்தை வடிவமைத்துள்ளேன். இதனை செய்ய ரூ.1000 மட்டுமே தேவைப்பட்டது. இதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படாது. டாக்டர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் மட்டுமின்றி அவர்களின் செல்போன், வாட்ச், டெதஸ்கோப் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களையும் இந்த பெட்டியில் வைத்து கிருமி நீக்கம் செய்ய முடியும். இதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
இந்த முறையில் என்-95 முகக்கவசத்தை 5 முறை கிருமி நீக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதனை, மருத்துவமனை வார்டுகள், பயிற்சி டாக்டர்கள் விடுதி உள்ளிட்ட பகுதியில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மைக்ரோ பயாலஜி துறையிடமும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story