கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் தவிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 2 July 2020 12:51 AM GMT (Updated: 2 July 2020 12:51 AM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஏப்ரல் மாதம் முதல் பஸ்கள் மற்றும் ரெயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே அரசு ஊழியர்கள் மற்றும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்காகவும் மிகவும் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 50 சதவீத பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டது.

மேலும் 60 சதவீத பயணிகளை மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது. அதன்படி ஒவ்வொரு பஸ்களிலும் 34 பயணிகள் வரை அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஒருசில நாட்களில் பஸ்களில் அதிக அளவில் மக்கள் பயணிக்க தொடங்கினர். இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் போனது. அதோடு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவியது.

பஸ்கள் நிறுத்தம்

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் போக்குவரத்து நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் நகர் பகுதிகளுக்கு வரமுடியாமல் தவித்தனர். இதுதவிர ஒருசில விவசாயிகள் பஸ்களில், தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். பஸ்கள் இயங்காததால் அதிக வாடகை கொடுத்து சரக்கு வாகனங்களில் மார்க்கெட்டுக்கு விளை பொருட்களை கொண்டு வரும் நிலை ஏற்பட்டது.

மீண்டும் எப்போது பஸ் போக்குவரத்து தொடங்குமா? என்ற நிலையில் மக்கள் உள்ளனர். இதற்கிடையே பஸ்கள் இயக்கப்படாததால், திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் மைதானம் போன்று வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம் போக்குவரத்து கழக பணிமனைகளில் பராமரிப்புக்காக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

Next Story