பெங்களூரு குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.1,400 கோடி முறைகேடு வழக்கு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் கர்நாடக அரசு உத்தரவு


பெங்களூரு குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.1,400 கோடி முறைகேடு வழக்கு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2020 3:30 AM IST (Updated: 2 July 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.1,400 கோடி முறைகேடு வழக்கை சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில் குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.1,400 கோடி முறைகேடு வழக்கை சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ.1,400 கோடி முறைகேடு

பெங்களூரு பசவனகுடி அருகே நெட்கலப்பா சர்க்கிளில் குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ள பணத்தை நிர்வாகிகள் முறைகேடு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கி செயல்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கியில் முறைகேடு நடந்திருப்பதுடன், வங்கியின் தலைவர், நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு இருந்த அதிகாரத்தை ரிசர்வ் வங்கி பறித்ததுடன், புதிதாக சிறப்பு நிர்வாக அதிகாரி ஒருவரை ரிசர்வ் வங்கி நியமித்தது.

இதற்கிடையில், குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஏராளமான புகார் வந்தது. இதையடுத்து, அந்த வங்கியிலும், முன்னாள் தலைவர், நிர்வாகிகள் வீடுகளிலும் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது கிடைத்த ஆவணங்களின்படி குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் ரூ.1,400 கோடி முறைகேடு நடந்திருப்பதும், இதில் முன்னாள் தலைவர், நிர்வாகிகள், பிற அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

அந்த வங்கியில் நடந்த முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலர், இந்த முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு பதில் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கும்படி கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, குரு ராகவேந்திரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கை ஊழல் தடுப்பு படையில் இருந்து சி.ஐ.டி.க்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சி.ஐ.டி. போலீசார் இந்த முறைகேடு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் இருந்தும் தகவல்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் விரைவில் முன்னாள் தலைவர், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தவும் சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story