பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாததாக புகார் கலெக்டர் கதிரவன் ஆய்வு


பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாததாக புகார் கலெக்டர் கதிரவன் ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2020 10:30 PM GMT (Updated: 2 July 2020 6:15 PM GMT)

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாததாக வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.

ஈரோடு, 

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படாததாக வந்த புகாரை தொடர்ந்து கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.

வீடியோ

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தொற்று வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் செல்போனில் வீடியோ எடுத்து பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் நோயாளிகள் கூறி இருந்ததாவது:-

ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இருக்கும் எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பாடு வழங்குவதில்லை கைக்குழந்தை வைத்து இருப்பவர்களுக்கும் பால் வழங்கப்படவில்லை. குடிநீரும் முறையாக வழங்கவில்லை. எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், வீட்டுக்கு விடாமல் தனிமைப்படுத்தி உள்ளனர். எங்களுக்கு உதவ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று காலை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

இதேபோல் மேட்டுநாசுவம்பாளையம், லட்சுமிநகர் சோதனை சாவடி ஆகிய இடங்களில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சோதனை சாவடியில் உள்ள போலீசாரிடம், இ-பாஸ் இல்லாமல் ஈரோட்டுக்குள் வரும் வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

Next Story