சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் தொடர்பு பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் தென்மண்டல ஐ.ஜி. முருகன் பேட்டி


சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் தொடர்பு பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் தென்மண்டல ஐ.ஜி. முருகன் பேட்டி
x
தினத்தந்தி 3 July 2020 1:11 AM IST (Updated: 3 July 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் தொடர்பு பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. முருகன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நண்பர்கள் தொடர்பு பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. முருகன் தெரிவித்தார்.

தென்மண்டல ஐ.ஜி. ஆலோசனை

தென்மண்டல ஐ.ஜி. முருகன் நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவரும் சமம்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசுக்கு நீங்கள் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சி.பி.சி.ஐ.டி. தனிப்பட்ட விசாரணை அமைப்பு. அவர்களின் விசாரணைக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் உண்மை என்றால், சட்டப்படி என்ன நடவடிக்கையோ, அதனை எடுக்க வேண்டும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்ற வகையில் விசாரணை நடந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. புலன் விசாரணையில் நாங்கள் தலையிட முடியாது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

லாக்அப் மரணம்

லாக்அப் மரணங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். மனித உயிர் மிகவும் முக்கியமானது. போலீஸ் துறை லாக்அப் மரணங்களை ஆதரிக்கவில்லை. விசாரணையை அறிவியல் முறைப்படி மாற்றி உள்ளோம். தற்போது உள்ள பயிற்சி முறையில் குற்றவாளிகளிடம் 1000 கேள்விகள், 500 கேள்விகள் கேட்டோம் என்பார்கள்.

தற்போது விசாரணை முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பயிற்சி அளிக்கும்போது, பழைய முறை சுத்தமாக ஒழியும். சாத்தான்குளம் வழக்கு கோர்ட்டு விசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்றம் கட்டளைகளை நிறைவேற்றாமல், எந்த வழக்கு பதிவும் செய்ய முடியாது. அதற்கான வழிமுறை உள்ளது. ஆங்காங்கே சில குறைகள் இருக்கலாம். அந்த குறைகள் களையப்படும்.

சம்பளத்துடன் கூடிய விடுப்பு

சாத்தான்குளம் பெண் போலீஸ் ரேவதி என்ன முறையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமோ, அந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவர் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கேட்டு உள்ளார். அவருடைய வேண்டுகோளின்படி, ஒரு மாதத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நான் புதிதாக பொறுப்பேற்று இருப்பதால் அனைத்து மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு செய்கிறேன். முதல்-அமைச்சர் வருகை பற்றி எந்த தகவலும் இல்லை.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சினிமா பாணியில் மக்களை அணுகுகின்றனர். இதில் ஒரு சில உண்மையும் உள்ளது. அதனை மறுக்கவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம். போலீசாரை பொறுப்புள்ள, கடமை உணர்வு மிக்க திறமையான போலீசாக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

1990-ல் நடந்த சாதிகலவரத்தின் போது போலீசாரிடம் என்ன உபகரணம் இருந்தது, கூடங்குளம் பிரச்சினையின்போது என்ன உபகரணம் இருந்தது, தற்போது என்ன உபகரணம் உள்ளது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அது காலப்போக்கில் சரியாகி விடும்.

அதிகாரம் கிடையாது

கொரோனா காலத்தில் போலீஸ் நண்பர்கள் குழு, போலீசுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பு. அவர்களுக்கு போலீஸ் துறையில் உள்ள எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. ஊரடங்கு காலத்தில் விதிமுறை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். போலீஸ் நண்பர்கள் அத்துமீறி செயல்படுவது தெரிய வந்தால் நிறுத்தப்படும்.

போலீசுக்கு மன உளைச்சல் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது. கொரோனா ஊரடங்கில் மன உளைச்சல் ஏற்படுவது இயற்கை. தற்போது எல்லோரும் பாதிக்கப்படுகின்றனர். இதில் போலீசார் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் போலீசாரை 3 பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வாரமாக ஓய்வு கொடுத்து வருகிறோம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா பணிக்கு எடுப்பது இல்லை.

நடவடிக்கை

ஏற்கனவே போதிய அளவில் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அறிவுரைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணித்தால் இது போன்ற பிரச்சினைகளை தடுக்கலாம். சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக வரும் புகார்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தென்மண்டலத்தில் 545 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஏதாவது ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். அதனை நாங்கள் சரி செய்வோம். போலீசார் நிச்சயமாக பொதுமக்களுக்கு நண்பர்கள்தான். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story