தடுப்பூசி போட்டதால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் 3 மாத குழந்தை திடீர் சாவு கடலூர் அருகே பரபரப்பு


தடுப்பூசி போட்டதால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் 3 மாத குழந்தை திடீர் சாவு கடலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 2 July 2020 10:30 PM GMT (Updated: 2 July 2020 10:15 PM GMT)

கடலூர் அருகே 3 மாத குழந்தை திடீரென இறந்தது. தடுப்பூசி போட்டதால் அந்த குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம்

கடலூர் அருகே 3 மாத குழந்தை திடீரென இறந்தது. தடுப்பூசி போட்டதால் அந்த குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை சாவு

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், டிரைவர். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு சஷ்வின் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை ஹேமலதா, தொட்டிலில் கிடந்த தனது குழந்தை சஷ்வினை பார்த்துள்ளார். அப்போது குழந்தை எவ்வித அசைவும் இன்றி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமலதா மற்றும் உறவினர்கள் குழந்தையை எழுப்பி பார்த்தனர். ஆனால் குழந்தை எழுந்திருக்கவில்லை. இதில் பதறிய அவர்கள் உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த ஹேமலதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பா.ம.க. மாநில இளைஞர் சங்க துணை அமைப்பு செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் குழந்தையின் உடலுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் உடலை ஹேமலதா மடியில் போட்டுக்கொண்டு கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுபற்றி அறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் நடுவீரப்பட்டுக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நடவடிக்கை

அப்போது பொதுமக்கள், நடுவீரப்பட்டில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நடந்த மாதாந்திர மருத்துவ முகாமுக்கு சென்ற ஹேமலதா, அங்கு தனது குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். அதன் பிறகு தான் குழந்தை இறந்துள்ளது. அதனால் தவறான தடுப்பூசி போடப்பட்டிருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் செவிலியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், குழந்தை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட டாக்டர் மற்றும் செவிலியர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பரபரப்பு

அதனை ஏற்றுக்கொண்ட ஹேமலதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நடுவீரப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story