நாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதம் குற்றவாளியை கைது செய்யக்கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்


நாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதம் குற்றவாளியை கைது செய்யக்கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 July 2020 11:30 PM GMT (Updated: 2 July 2020 10:52 PM GMT)

நாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதப்படுத்திய குற்றவாளியை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் காமராஜர் சிலை சேதப்படுத்திய குற்றவாளியை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் எச்.வசந்தகுமார் எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

காமராஜர் சிலை சேதம்

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பு ரவுண்டானாவின் நடுவே காமராஜர் சிலை மார்பளவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்தனர். இது அப்பகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் நேற்று காலை தெரிய வந்தது.

இதனால் காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தகவல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நிர்வாகிகளிடையே வேகமாக பரவியது.

ஆர்ப்பாட்டம்

இதுபற்றிய தகவல் அறிந்த எச்.வசந்தகுமார் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டனர்.

பின்னர் அவர்கள் காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், சேதப்படுத்திய குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் மனு

பின்னர் வசந்தகுமார் எம்.பி. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று காமராஜர் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, காமராஜர் சிலையை அப்பகுதியில் சுற்றித்திரியும் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த மனநோயாளி ஒருவர் தான் சிலையை உடைத்திருப்பது வடசேரி போலீலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மனநோயாளியை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.

நாகர்கோவில் ரெயில் நிலையம்

நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story