நாகர்கோவிலில் தெருவை மதுபாராக மாற்றிய மதுபிரியர்கள் கொரோனா பரவுமோ? என மக்கள் அச்சம்


நாகர்கோவிலில் தெருவை மதுபாராக மாற்றிய மதுபிரியர்கள் கொரோனா பரவுமோ? என மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 3 July 2020 4:36 AM IST (Updated: 3 July 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகரின் முக்கியமான ஒரு தெருவை மதுபாராக மதுபிரியர்கள் மாற்றி உள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரின் முக்கியமான ஒரு தெருவை மதுபாராக மதுபிரியர்கள் மாற்றி உள்ளனர். இதனால் கொரோனா பரவுமோ? என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முக்கிய பகுதி

நாகர்கோவில் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியும் ஒன்றாகும். இங்கு பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் அருகே ஜெகநாதன் தெரு உள்ளது. இந்த தெருவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் குடியிருந்து வருகிறார்கள்.

இந்த தெருவின் அருகில் தான் ஒருங்கிணைந்த மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, திருமண மண்டபமும் அங்கு அமைந்துள்ளன.

திறந்தவெளி மதுக்கூடம்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜெகநாதன் தெரு மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுபிரியர்களின் திறந்தவெளி மதுக்கூடமாக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேநிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்றதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். போலீசாரும் அடிக்கடி ரோந்து சென்றதால் மதுபிரியர்கள் இந்த பகுதிக்குள் வராமல் இருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மதுபிரியர்களின் அட்டூழியம் அங்கு தொடர்கிறது. தெருவின் ஓரங்களில் கும்பலாக அமர்ந்து மதுபாட்டில்களை திறந்து வைத்து மது அருந்துகிறார்கள்.

தொற்று பரவுமோ?

மதுபிரியர்களின் அட்டூழியத்தால் அந்த தெருவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமின்றி அனைவரும் வெளியில் சென்றுவர அச்சப்படுகிறார்கள். மதுபிரியர்களால் தங்களது உயிருக்கு ஆபத்து எதுவும் நேரிடுமோ? என்ற அச்சம் தான் அதற்கு காரணம். சில நேரங்களில் தெருவிளக்குகள் தங்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நினைக்கும் மதுபிரியர்கள், தெருவிளக்குகளையும் கற்களை வீசி உடைத்து, இருளாக்கி விடுகின்றனர். இது அந்த தெரு மக்களை கூடுதலாக அச்சப்பட வைக்கிறது.

குடிமகன்கள் தெருக்களில் வீசியெறிந்துவிட்டுச் செல்லும் மதுபாட்டில்கள் உடைந்து பலரை காயப்படுத்தவும் செய்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் நபர்களால் கொரோனா தொற்று பரவி விடுமோ? என்று தெருவாசிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ஒருமித்த கோரிக்கை

எனவே போலீசார் இந்த மதுபிரியர்களை பிடித்து உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பது ஜெகநாதன் தெருவாசிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்து வருகிறது. நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

Next Story